×

இ-பாஸ் நடைமுறையால் கொடைக்கானலில் சுற்றுலா தொழில் கடுமையாக பாதிக்கும்: தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை

கொடைக்கானல்: கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலா தொழில் கடுமையாக பாதிக்கும். எனவே, இத்தீர்ப்பை மறுபரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சர்வதேச சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு நிலவக்கூடிய சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும், இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை காண்பதற்காகவும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப்பயணிகள் அதிகளவு வருகை தருவர்.

குறிப்பாக கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்கள் மற்றும் வார விடுமுறை, தொடர் விடுமுறை காலங்களில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் கட்டுங்கடாத அளவில் இருக்கும். இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் மே 7ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி தேதி வரை வரக்கூடிய சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று வர வேண்டும் என கூறியுள்ளது. இந்த தீர்ப்பு கொடைக்கானலில் சுற்றுலா தொழிலை நம்பி உள்ளவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலை நகரமான கொடைக்கானலில் விவசாயமும் தற்போது நலிவடைந்து வருகிறது. மேலும் கொடைக்கானலில் பெரியளவில் தொழிற்சாலைகளோ, மாற்று தொழில்களோ இல்லாத ஒரு நிலை இருந்து வருகிறது. அதனால் கொடைக்கானலில் எந்த திசையிலும் சுற்றுலா தொழிலை நம்பி தான் இங்கு இருக்கக்கூடிய உள்ளூர் வாசிகள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.
இ- பாஸ் நடைமுறை தற்போது அமலுக்கு வந்தால் கொடைக்கானலின் சுற்றுலா தொழிலுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என உள்ளூர்வாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து கொடைக்கானல் வாழ் மக்கள் கூறுகையில்,‘இ-பாஸ் எவ்வாறு பெறுவது, ஒரு நாளைக்கு கொடைக்கானல் நகருக்குள் எத்தனை வாகனம் அனுமதிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு குழப்பங்கள் உள்ளன. இந்த தீர்ப்பு அமல்படுத்தப்படுமானால் சுற்றுலா தொழில் கடுமையாக பாதிக்கப்படும். எனவே சென்னை உயர்நீதிமன்றம் இத்தீர்ப்பை மறுபரிசீலனை செய்து இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்,’என்றார்.

* இ-பாஸ் நடைமுறை தெரியாமல் குழப்பம்
கொடைக்கானலில் கோடை சீசனின்போது சுற்றுலாப்பயணிகள் இங்கு வருவதற்கு முன்பே அறைகளை புக் செய்து விடுவர். தற்போது இந்த இ-பாஸ் முறை நடைமுறைக்கு வரும்பட்சத்தில் வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கிடைக்காமல் போனால் அவர்கள் என்ன செய்வார்கள் என்பது புதிராக உள்ளது. மேலும் இ-பாஸ் நடைமுறையில் என்னவிதமான நெறிமுறைகள் அமல்படுத்தப்படும் என்ற தகவல்களும் தற்போது வரை வெளியாகததால் சுற்றுலா பயணிகள், சுற்றுலா தொழில் புரிவோர் பெரிதும் குழப்பமடைந்துள்ளனர்.

The post இ-பாஸ் நடைமுறையால் கொடைக்கானலில் சுற்றுலா தொழில் கடுமையாக பாதிக்கும்: தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Dindigul district ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் தொடர்மழை; கொட்டுது...